Monday, October 18, 2010

குலசேகரன்பட்டினம் தசரா விழா சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலம்!


குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவையட்டி நேற்றுநள்ளிரவு லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் ஓம் காளி, ஜெய் காளி என்ற கோஷம் விண்ணதிர மகிசாசூரசம்ஹாரம் விழா நடந்தது. இரவு முதல் விடிய விடிய தசரா குழுவினர் கையில் தீசட்டி ஏந்தி வழிப்பட்டனர். 


இந்தியாவில் மைசூருக்கு நிகராக, தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்  கோவிலில் தசரா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தசரா விழா கடந்த 8-ந் தேதி தொடங்கியது. இதையட்டி விரதம் கடைப்பிடித்து வரும் பக்தர்கள் கைகளில் காப்பு கட்டினர். 

விழா நாட்களில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் துர்க்கை, விசுவகர்மேசுவரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதகிருஷ்ணர், மகிசாசூரமர்த்தினி, ஆனந்தநடராஜர், கஜலட்சுமி, கலைமகள் போன்ற திருக்கோலங்களில் முத்தாரம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 10-ம் நாளான (தசரா) நேற்று நள்ளிரவு சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள், குலசேகரன்பட்டினம் கடற்கரையில் திரண்டனர். நகரம் விழாக் கோலத்துடன் காணப்பட்டது. வேடம் அணிந்த பக்தர்களின் ஆட்டம், கொண்டாட்டத்துடன் ஊரே குதூகலமாக இருந்தது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும், காலை முதல் கோவிலில் குவிந்த வண்ணமாக இருந்தனர். சுற்றுவட்டாரமான திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை மற்றும் கிராமப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் குவிந்தனர். வீதியெங்கும் பக்தர்கள் வந்த கார், வேன், வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. திருச்செந்தூர்-குலசேகரன்பட்டினம் பை-பாஸ் சாலையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் நடந்து கோவிலை வந்தடைந்தனர்.

காப்பு கட்டியது முதல் ஊர், ஊராக வேடம் அணிந்து சென்று காணிக்கை வசூலித்த பக்தர்கள் கோவிலில், காணிக்கை தொகையை சேர்த்தார்கள். காலை முதல் நள்ளிரவு வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தவாறு இருந்தன. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அனைவரும் சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரைக்கு திரண்டு சென்றனர். இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக சூரசம்ஹாரத்துக்கான சூலத்துக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் மகிசாசூரமர்த்தினி திருக்கோலத்தில் அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். காளி வேடம் அணிந்த பக்தர்கள் புடை சூழ கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு சென்றார். அங்கிருந்து அம்பாள் சூரசம்ஹாரத்துக்கு வரும் அழகை காண, அலைகடலென லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

நள்ளிரவு 12 மணிக்கு பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து, சூரனை வதம் செய்ய முத்தாரம்மன் வந்தார். இதைப் பார்த்து பரவசம் அடைந்த பக்தர்கள் அம்மனுக்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். சூலத்தை எய்து வரமுனி என்ற சூரனின் தலையை ‘மகிசாசூரமர்த்தினி‘ வீழ்த்தினார். அப்போது பக்தர்கள் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் வெற்றி கோஷங்கள் எழுப்பினர். வாண வேடிக்கைகள், அதிர் வேட்டுகள முழங்கின. 

பின்னர் கடற்கரை மேடையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை 2 மணி அளவில் மீண்டும் சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளிய அம்பாளுக்கு அங்கும் பூஜைகள், பரிவாரங்கள் நடந்தன. காலை 3 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதையட்டி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் அம்மன் தேருக்கு எழுந்தருளிய வைபவம் நடந்தது. தேர் நிலையத்துக்கு வந்ததும் கலையரங்கத்தில் அம்மன் எழுந்தருளினார். தசரா விழாவின் சிகர நாள் நேற்று என்பதால் குலசேகரன்பட்டினம் வீதியெங்கும் தசரா குழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. 

சுமார் 350-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் கரகாட்டம், நையாண்டி மேளம் மற்றும் தாரை, தப்பட்டை முழங்க உற்சாக நிகழ்ச்சிகளை நடத்தினர். நேற்று மாலை தொடங்கி விடிய, விடிய தசரா குழுவினரின் நிகழ்ச்சிகளை, பக்தர்கள் ரசித்துப் பார்த்தனர். 11-ம் நாள் விழாவான இன்று (திங்கட்கிழமை) காலையில் முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி பவனி வருகிறார். பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு அம்பாள் கோவில் வந்து சேரும் நிகழ்ச்சியும், 6 மணிக்கு பக்தர்கள் காப்பு களைதல் நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகமும் நடக்கின்றன. நாளை (12-ம் நாள் விழா) காலை முதல் பல்வேறு சிறப்பு பூஜை நடக்கிறது





No comments:

Post a Comment