Friday, March 18, 2011

சூப்பர் ஸ்டாரால் கூட முடியாது.....

சூப்பர் ஸ்டாரால் கூட முடியாது..அப்புக்குட்டியை பாராட்டிய இசைஞானி
அழகர்சாமியின் குதிரை பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா, அப்படத்தின் பிரஸ்மீட்டிற்கும் வந்திருந்து அனைவருக்கும் இன்ப 
அதிர்ச்சி கொடுத்தார். 
இந்த படத்தின் சில ரீல்களுக்கு பின்னணி இசையமைத்துவிட்டு நேராக அங்கு வந்த ராஜா உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்தார். உங்க செல்போன்களை அணைச்சு வச்சுட்டு இந்த படத்தின் பின்னணி இசையை கொஞ்சம் கேளுங்க. நீங்க ஒரு சொட்டு கண்ணீர் விடலைன்னா நான் இசையமைக்கிறதையே நிறுத்திடுறேன் என்றார் மிக தீர்க்கமாக!

அப்புறம் அவர் பேசியதெல்லாம் தத்துவம் நம்பர் ஆயிரமாயிரம்! மனுஷனோட எண்ணம்தான் இந்த மண்ணுல விதைக்கப்படுது. இன்னைக்கு ஜப்பான்ல இப்படி ஆகியிருக்குன்னா அதுக்கு காரணம் நம்ம எண்ணம்தான். அது து£ய்மையா இருக்கணும். கடவுள் நம்ம மீது கோபப்பட வேண்டாம். ஒரு பெருமூச்சு விட்டால் போதும். நாமெல்லாம் இல்லை. அதை புரிந்து கொள்ள வேண்டும் என்றவர், சட்டென்று படத்தை பற்றி பேச ஆரம்பித்தார்.
அப்புக்குட்டி இந்த படத்தில் அற்புதமா நடிச்சிருக்கார். அதுக்காக அவர் தன்னை சூப்பர் ஸ்டார்னு நினைச்சுக்க கூடாது. நீ நினைச்சாலும் சூப்பர் ஸ்டாரா ஆக முடியாது. அதே மாதிரி இந்த படத்தில் அப்புக்குட்டி நடிச்சிருக்கிற கேரக்டர்ல அந்த சூப்பர் ஸ்டாரால் கூட நடிக்க முடியாது. இதை புரிஞ்சுக்கணும். கதை சொல்ல வர்ற இயக்குனர்கள்தான் முதலாளி. பல வருஷமா போராடி தன்னுடைய அனுபவங்களையெல்லாம் கதையா வடிச்சு கொண்டு வர்றவங்க அவங்க. அவங்ககிட்ட போய், என் இமேஜூக்கு இந்த கேரக்டர் சரியா வருமான்னு கேட்க கூடாது என்று ராஜா பேச பேச இப்படியெல்லாம் அவர் பேசியதில்லையே என்ற அதிர்ந்து போய் கேட்டுக் கொண்டிருந்தார்கள் நிருபர்கள்.

Tuesday, March 15, 2011

ஜப்பானில் 3வது அணு உலை வெடித்தது: 4ம் அணு உலை தீ பிடித்து எரிகிறது: கதிர்வீச்சு அதிகரிப்பு!

ஜப்பானில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலைகள் தாக்குதலில் சுமார் 15 ஆயிரம் பேர் பலியானார்கள். ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள மியாகி மாநிலம் கடும் பேரழிவை சந்தித்துள்ளது. அங்குள்ள கடலோரத்தில் இருந்து இது வரை 2 ஆயிரத்துக்கும் மேற் பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.பூகம்பம், சுனாமி அலைகள் பாதிப்பால் ஜப்பான் வடபகுதி மக்கள் உறவினர் களையும், வீடுகளையும் இழந்து தவித்துக் கொண்டி ருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களை மேலும் அவதிக்குள்ளாக்கும் வகையில் மின் உற்பத்தி செய்யும் அணு உலைகள் எமன் போல் மாறி வெடிக்கத் தொடங்கி உள்ளன.மின்சாரம் தயாரிக்கும் அணு உலையில் செயல்பாடு நிற்குமானால், குளிர்ந்த நீர் பாய்ச்சி, அணு உலைகள் குளிர்விக்கப்பட வேண்டும். அதில் தவறு நடந்தால் கதிர் வீச்சு எற்பட்டுவிடும். ஜப்பான் வடக்கு பகுதியில் உள்ள அணு உலைகள் சுனாமி பேரலைகள் தாக்கியதும் தானாகவே செயல்பாட்டை நிறுத்திக் கொண்டன.ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அணு உலைகளை குளிர்விக்கும் ஜெனரேட்டர்கள் மற்றும் கருவிகள் பூகம்பத்தால் நொறுங்கி செயல்படாத தால் சிக்கல் ஏற்பட்டு விட்டது. இதையடுத்து கடல் தண்ணீரை அணு உலைகளில் செலுத்தி குளிர்விக்கும் முயற்சி நடந்து வருகிறது.   குளிர்விக்கும் நடவடிக்கைகளில் வெற்றி கிடைக்காததால் கடந்த சனிக் கிழமை ஒரு அணு உலை வெடித்தது.நேற்று புகுஷிமா அணு மின் நிலையத்தில் உள்ள 3-வது பிரிவு அணு உலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த இரு உலைகளில் இருந்தும் கதிர்வீச்சு வெளியானபடி உள்ளது. அது மேலும் பரவுவதை தடுக்க தீவிர முயற்சிகளில் ஜப்பான் நாட்டு அணுசக்தி நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள டைசி யூனிட் 2-வது பிரிவு அணு உலை இன்று அதிகாலை இந்திய நேரப்படி 6.10 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த அணு உலை எந்நேரத்திலும் வெடிக்கலாம் என்று நேற்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.2-வது பிரிவு அணு உலை வெடித்து சிதறிய சிறிது நேரத்தில் அந்த பிரிவில் இருந்த ஹைட்ரஜன் சிலிண்டர்களும் வெடித்து சிதறின. இதனால் 2-வது பிரிவு அணு உலை கூரை, சுற்றுச்சுவர்கள் நொறுங்கின. அணு உலையும், ஹைட்ரஜன் சிலிண்டரும் அடுத்தடுத்து வெடித்த சத்தம் பல மைல் தொலைவுக்கு கேட்டது.2-வது பிரிவு அணு உலைப் பகுதியில் இருந்த சுமார் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புக்காக சென்றிருந்த ராணுவ வீரர்களும் கதிர் வீச்சில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சோதனை மேல் சோதனையாக 2-ம் எண் அணு உலை வெடித்ததில் இருந்து கிளம்பிய அதிக அளவு வெப்பம் மற்ற அணு உலை பிரிவுகளில் தாக்கியது.இதன் காரணமாக 4-வது பிரிவு அணு உலையில் தீ பிடித்தது. எனவே 4-வது பிரிவு அணு உலை இன்று எந்த நேரத்திலும் வெடித்து சிதறலாம் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. புகுஷிமா அணு மின் நிலையத்தில் மொத் தம் 6 அணு உலை பிரிவுகள் உள்ளன. இவற்றில் 4 பிரிவுகள் பாதுகாப்பு இல்லாததாக மாறி விட்டன.மற்ற 2 அணு உலைகள் வெடிக்காமல் இருக்க ஜப்பான் நாட்டு நிபுணர்கள் போராடிக் கொண்டிருக் கின்றனர். அனால் அந்த அணு உலைகளும் வெடித்து விடும் என்று தெரிகிறது. இந்த 6 அணு உலைகளும் ஜப்பான் வடகிழக்கு பகுதியின் மின் தேவையில் சுமார் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.முதல் 2 அணு உலைகள் வெடித்த போது கதிர்வீச்சு அபாயம் அதிகம் இல்லை என்று ஜப்பான் அரசு கூறி வந்தது. ஆனால் இன்று 3-வதாக மேலும் ஒரு அணு உலை வெடித்து இருப்பதன் மூலம் கதிர்வீச்சு அளவு பல மடங்கு அதிகரித்து விட்டதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஜப்பான் பிரதமர் நயடோகான் ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதில் அவர் 3 அணு உலைகளில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சு அதிகரித்து வருகிறது. இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே புகு ஷிமா அணு உலை பகுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருப்பவர் கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறியுள்ளார்.அரசின் எச்சரிக்கை ஜப்பான் மக்களிடம் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டோக்கியோவில் இருந்து புகுஷிமா மின்நிலைய அணு உலைகள் தென்மேற்கு திசையில் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. புகுஷிமா அணு உலை கதிர்வீச்சு டோக்கியோ வரை வந்து விடுமோ என்று மக்கள் பயந்தபடி உள்ளனர்.பூகம்ப பாதிப்புகளை சமா ளித்து விடலாம். கதிர்வீச்சை எப்படி எதிர் கொள்வது என்று ஜப்பான் மக்கள் கதி கலங்கி போய் உள்ளனர்.   அணு உலைகளில் இருந்தும் கதிர்வீச்சு வெளியானபடி உள்ளது. அணு உலை கசிவைத் தடுத்து விட்டாலும் கூட அணு மூலப் பொருளில் இருந்து வெளி யாகும் கதிர்வீச்சுகளை நிபுணர்களால் தடுக்க இயல வில்லை.மூலப்பொருளில் இருந்து வெளியாகும் காமா கதிர்கள் மிக, மிக பயங்கர ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கதிர்வீச்சு அபாயம் தொடர்ந்து நீடிப்பதால் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே 3.5 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.நேற்று சுமார் 1.80 லட்சம் பேர் தொலை தூர பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.   ஜப்பானின் வட கிழக்கு பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. 15 லட்சம் பேர் குடிநீர் தட்டுப்பட்டால் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கும் சரியான உணவு, உடைகள் கிடைக்க வில்லை.வடகிழக்கு பகுதி நகரங்களில் சுமார் 6 லட்சம் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் சேத மதிப்பு கணக்கிட முடியாதபடி உள்ளது. ஜப்பானின் வடகிழக்கில் பல ஊர்களுக்கு மீட்புக் குழு வினர் செல்ல முடியாத படி உள்ளது. ஜப்பானின் வடகிழக்கில் பல ஊர்களுக்கு மீட்புக் குழுவினர் செல்ல முடியாத படி சாலைகள் நொறுங்கியுள்ளன. இதனால் உலகின் பல நாட்டு மீட்பு குழுக்களும் வான் வழியாகவே மீட்பு பணிகளை செய்து வருகின்றன.

துபாய் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு : இந்தியர்கள் 11பேருக்கு ஆயுள், ஒருவருக்கு மரண தண்டனை

அரபு நாடான துபாயில், சக இந்தியரைக் கொடுமைப்படுத்தி கொலை செய்த வழக்கில் ஒரு இந்தியருக்கு மரண தண்டனையும், 11 இந்தியர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு குடிபோதையில் ஏற்பட்ட தகராறி்ல் சக இந்தியரைக் கொலை செய்ததற்காக, பஞ்சாபைச் சேர்ந்த மேஜர் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 11 இந்தியர்களுக்கும், 1 பாகிஸ்தானியருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த நபர் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. சுகிஜித் சிங், ராகேஷ் குமார், சுக்விந்தர் சிங், சுர்ஜித் சிங், மஞ்சித் சிங், ராஷ்பல் சிங், பல்விந்தர் சிங், அமர்ஜித் சிங், சுரிந்தர் சிங், பல்விந்தர் சிங், சரப்ஜித் சிங் மற்றும் பாகிஸ்தானியர் முஹமது ரபாத் ஆகியோர் தான் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஆவர்.

இந்த வழக்கு துபாயில் உள்ள ஜெபெல் அலி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.  இவ்வழக்கு விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி நிறைவடைந்தது. தீர்ப்பு மட்டும் ஜனவரி மாதம் 3ம் தேதி வழங்குவதாக இருந்தது. ஆனால் தீர்ப்பு முதலில் பிப்ரவரி 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் மார்ச் 14ம் தேதி அளிக்கப்பட்டது.

சோமாலியா கடற்கொள்ளையர்கள் கப்பல் சிறை பிடிப்பு : இந்திய கடற்படை அதிரடி நடவடிக்கை

சோமாலியா கடற்கொள்ளையர்களின் கப்பல் ஒன்றை வழிமறித்து சிறைபிடித்த இந்திய கடற்படையினர், அதில் பிணைக் கைதிகளாக சிறை வைக்கப்பட்டிருந்த 13 சிப்பந்திகளை மீட்டுள்ளனர்.அத்துடன் சோமாலியா கடற்கொள்ளையர்கள் 61 பேரையும், இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.மேற்கு கடலோரப் பகுதியிலிருந்து 600 கடல் மைல் தொலைவில், இந்திய கடற்படையினர் இந்நடவடிக்கையை மேற்கொண்டனர்.பிடிபட்டுள்ள சோமாலிய கொள்ளையர்களின் கப்பல், கொள்ளையர்களின் தாய் கப்பல் என்று கூறப்படுகிறது.பிடிபட்ட இந்த கப்பல் மும்பை கொண்டு வரப்படுவதாகவும், இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tuesday, March 1, 2011

ரஹ்மானுக்கு விருதில்லை

கடந்த முறை 2 ஆஸ்கார் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த முறை ஆஸ்கார் விருதினை நழுவ விட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று 83வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடந்தது.
விழாவில் அதிக அளவிலான விருதுகளை தி கிங்ஸ் ஸ்பீச், இன்செப்ஷன், தி சோஷியல் நெட்வொர்க் ஆகிய படங்கள் பெற்றன. இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது காலின் பிர்த் என்பவருக்கு தி கிங்ஸ் ஸ்பீச் என்ற படத்திற்காகவும், சிறந்த நடிகை விருது நதாலி போர்ட்மேனுக்கு பிளாக் ஸ்வான் படத்திற்காகவும் கிடைத்தது. தி கிங்ஸ் ஸ்பீச் படம் சிறந்த இசையமைப்பளருக்கான விருதையும் பெற்றது.
இதுதவிர சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்), சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த இயக்குனர் என மொத்தம் 5 விருதுகளை தி கிங்ஸ் ஸ்பீச் படம் தட்டிச் சென்றது.
தி சோஷியல் நெட்வொர்க் படம் இசை (ஒரிஜினல் ஸ்கோர்), சிறந்த எடிட்டிங், சிறந்த திரைக்கதை (தழுவல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் விருதுகளை வென்றது.
இன்செப்ஷன் படம் விசுவல் எபெக்ட், ஒலிக்கலவை, ஒளிப்பதிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றது. சிறந்த வெளிநாட்டுப் படங்கள் வரிசையில் டென்மார்க் படமான இன் எ பெட்டர் வேர்ல்ட் படம் ஆஸ்கார் விருது பெற்றது.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்: மே 13ல் முடிவுகள் :

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கவுள்ளது. அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.
தமிழக சட்டமன்றத்தின் ஆயுட் காலம் வரும் மே மாதம் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தேதி தேர்தல் நடக்கவுள்ளது.அதே போல கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கும் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டன. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களும் இன்று கூடி இறுதிக் கட்ட ஆலோசனையை நடத்தினர். இதையடுத்து மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் தேர்தல் தேதிகளை அறிவித்தனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறுகையி்ல், தமிழகத்தில் 4.59 கோடி வாக்காளர்களும் புதுச்சேரியில் 80 லட்சம் வாக்காளர்களும் உள்ளன. மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் தான் ஓட்டுப் பதிவு நடைபெறும். முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலுடன் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 54,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படும். 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும். மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும்.தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என்றார்.தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால் அரசு புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.