மனித குலத்தின் இறையாண்மைக்கும், விஞ்ஞான அறிவுக்கும் விடப்பட்ட சவால் "எய்ட்ஸ்'. உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ்க்கு தடுப்பு மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மரணத்தை சிறிது காலம் தள்ளிப்போட மட்டுமே மாத்திரைகள் உள்ளன. சர்க்கரை, ரத்தக்கொதிப்புக்கு மருந்து சாப்பிடுவது போல் வாழ்நாள் முழுவதும் மாத்திரை உட்கொள்ள வேண்டும்.
உழைக்கும் வயதினர் சபலத்திற்கு அடிமைப்பட்டு உருத்தெரியாமல் அழிக்கும் எய்ட்ஸ்
நோயால், மனிதநேயமும், குடும்ப உறவுகளும் குப்பைக்கு சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய ஒன்று. எய்ட்ஸ் பாதித்தோரை ஊர் மக்கள் ஒதுக்கி வைப்பதும், குடும்பத்தில் இருந்து வெளியேற்றுவதும் வாடிக்கையாக அறங்கேறுகிறது. அத்தகைய புறக்கணிப்பு, மனிதநேய மாண்பு சிதைவுற்றும், சீரழிந்தும் இருப்பதையே நமக்கு உணர்த்துகிறது.இன்றைய சூழலில், எய்ட்ஸ் பாதித்தோருக்கு அன்பும், ஆதரவும் கொடுத்து பாதுகாக்க வேண்டியது அவசியம். எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நாட்டின் அனைத்து பகுதியிலும் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும், விழிப்புணர்வு மூலம் நோய் பாதித்தோரை அரவணைக்கும் சூழ்நிலையை உருவாக்கவும் முடியும்.உலகத்தில் வாழும் மனிதர்களுக்கு ஏற்பட்ட ஆபத்து தான் எய்ட்ஸ் நோய் என்பதை நினைவூட்டும் நாள் இன்று (டிச.,1.),இந்தியாவில் எச்.ஐ.வி., எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.லாரி தொழிலுக்கு மையமாக இருக்கும், நாமக்கல் மாவட்டம் 2005ம் ஆண்டில் தமிழகத்திலேயே எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிப்படைந்தோர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. பல்வேறு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரத்தால், முதலிடத்தில் இருந்து மூன்றாமிடத்துக்கு வந்துள்ளது.
நாமக்கல் அரசு மருத்துவமனை ஏ.ஆர்.டி., மைய தலைமை டாக்டர் ரமேஷ் கூறியதாவது: நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள வி.சி.டி.சி., மற்றும் ஏ.ஆர்.டி., மையத்துக்கு தினமும் சிகிச்சை, கவுன்சிலிங் பெற 250 பேர் வருகின்றனர். அதில், 20 சதவீதம் பேருக்கு நோய் தாக்கியிருப்பது உறுதி செய்யப்படுகிறது. எய்ட்ஸ் நோய் உறுதி செய்யப்பட்டோருக்கு சிகிச்சை மற்றும் மருந்து வழங்குவதற்காக, நாமக்கல் அரசு மருத்துவமனையில் 2005ம் ஆண்டு ஏ.ஆர்.டி., சிகிச்சை மையம் (கூட்டு மருந்து) துவங்கப்பட்டது.இம்மையத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் 11 ஆயிரத்து 600 பேர் பதிவு செய்துள்ளனர். அதில் குழந்தைகள் உட்பட 6,700 பேர் தொடர்ந்து ஏ.ஆர்.டி., மருந்து மற்றும் சத்துமாவு உட்கொள்கின்றனர். நாமக்கல் ஏ.ஆர்.டி., மையத்துக்கு சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, பழனி, தேனி, திண்டுக்கல், கரூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து எய்ட்ஸ் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஏ.ஆர்.டி., மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. சென்னை, தாம்பரம் அடுத்து, தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில்தான் சிறப்பு சிகிச்சை பிரிவு உள்ளது. அதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஒரு நோயாளிக்கு மாதந்தோறும் நோயின் பாதிப்பை பொறுத்து 1,150 ரூபாய் முதல் 3,500 ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.நோயாளிகளுக்காக மாதம்தோறும் ஐந்து கோடி ரூபாய் அளவில் செலவு செய்யப்படுகிறது. ஒரு நபருக்கு வாழ்நாள் முழுவதும் மூன்று லட்ச ரூபாய் வரை செலவழிக்கப்படுகிறது. ஏ.ஆர்.டி., மையம் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கிடைத்த ஒரு வரம், என்றார்.
எய்ட்ஸ் நோய்க்கு தரமான சிகிச்சை : நாமக்கல் அரசு தலைமை பொது மருத்துவமனையில், தன்னார்வ எய்ட்ஸ் பரிசோதனை மையம் செயல்படுகிறது. அங்கு பரிசோதனைக்கு வருபவர்களில், இருபது சதவீதம் பேருக்கு எச்.ஐ.வி., பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.
* இந்தியாவில், மும்பை, சென்னை தாம்பரம் மருத்துவமனைகளுக்கு அடுத்ததாக, நாமக்கல் அரசு மருத்துவமனையில் தான் எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிப்புக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இங்கு ஏ.ஆர்.டி., மருந்து, எச்.ஐ.வி., பாதித்தோரை தாக்கும் சந்தர்ப்பவாத நோய்களுக்கான சிகிச்சை, உடலுறவால் ஏற்படும் நோய்க்கான சிகிச்சை, தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள் அனைவருக்கும், எச்.ஐ.வி., பரிசோதனை செய்யப்படுகிறது. அதில், 0.8 சதவீதம் பேருக்கு எச்.ஐ.வி., பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
* வெள்ளை அணுக்கள் பரிசோதனை மிஷின் ஏ.ஆர்.டி., சென்டரில் அமைக்கப்பட்டு வாரம் முழுவதும் நோயாளிக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எய்ட்ஸ் நோய் தடுக்க தனிக்குழு ஏற்படுத்துவது அவசியம்: வைரசால் பரவக்கூடிய எய்ட்ஸ் நோயை தடுப்பது தொடர்பாக, பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை. ஆலோசனை முகாம்களும் பெயரளவிலேயே நடத்தப்படுகின்றன. எனவே, வாரம் ஒருமுறை தேர்ச்சி பெற்ற டாக்டர்கள் மூலமாக, ஆலோசனை வழங்க வேண்டும். மாவட்ட முழுவதும் சிறப்புக்குழுக்கள் ஏற்படுத்த வேண்டும்.
நாடு முழுவதும் இன்று எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. நம் நாட்டில் 1988ல் இந்நோய் தாக்கம் அதிகமானது. நோய் தடுப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்நோய் தாக்கியவர்களை மனதளவில் திடப்படுத்தும் வகையில், உலக சுகாதார நிறுவனம் டிச., 1ம் தேதி "எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினம்' என அறிவித்தது.இந்நாளில் சுகாதாரத்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவன அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்துவது வழக்கம். எச்.ஐ.வி., என்ற வைரசால் பரவக்கூடியது எய்ட்ஸ்; தகாத உறவு, நோய் பாதித்தவரின் ரத்தம், அவருக்கு பயன்படுத்திய ஊசி, கிருமிநாசினி ஆகியவற்றின் மூலம் பரவுகிறது.சராசரியாக, நாட்டில் 33.3 மில்லியன் பேருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு உள்ளது. இதில், 2.5 மில்லியன் குழந்தைகள் என்பது அதிர்ச்சி தகவல். விழிப்புணர்வு ஏற்படுத்தாததால், இளம் தலைமுறையினர், குழந்தைகளுக்கு இந்நோய் எளிதில் பரவுகிறது.
நோய்க்கான வைரஸ் (எச்.ஐ.வி.,) உடலில் பரவியதும், வெள்ளை அணுக்களை தாக்கி, மொத்த எதிர்ப்பு சக்தியையும் குறைக்கிறது. இதனால், எதிர்ப்பு சக்தி படிப்படியாக குறைந்து உடல் மெலிதாகிறது. சளி, காய்ச்சல், டயோரியா என சிறிய பாதிப்புகள் கூட, எதிர்ப்பு சக்தி குறைவால், எளிதில் உடலை பாதிக்கிறது.நோய் தாக்கம் அதிகமாக இருந்த போது, என்.ஜி.ஓ., (தனியார் தொண்டு நிறுவனம்) மூலம், நோய் பாதித்தவர் விவரம், சிகிச்சை அளிக்க வேண்டிய முறை குறித்து ஆலோசித்து கணக்கெடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்த இவர்களது பணியில் தொய்வு ஏற்பட்டது. கணக்கிட்ட விவரங்கள் சரியாக இல்லை என புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, எய்ட்ஸ் நோய் தடுப்பு முறை மற்றும் விழிப்புணர்வை, அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், பணிச்சுமையால் சுகாதாரத்துறையினர் ஆலோசனை முகாம் கூட நடத்துவதில்லை.
பெயர் வெளியிட விரும்பாத, அரசு டாக்டர் ஒருவர் கூறியதாவது:தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப் பாட்டு சங்கம் சென்னையில் செயல்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தேவைப்படும் மருந்து உள்ளிட்ட விவரம் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.தேவையான மருந்து, அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறைக்கு ஒப்படைக்கப்படும். இம்மருந்துகள் நோயாளிகளுக்கு போடப்படுகிறதா; மாதத்துக்கு எத்தனை பேர் ஊசி, மருந்துகளை பெற்றனர் என்று ஆய்வு நடத்துவதில்லை.உயரதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால், எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்தும், விழிப்புணர்வு குறித்தும் ஆர்வம் காட்டுவதில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண, "எய்ட்ஸ் நோய் தடுப்புக்குழு' ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாக அமைக்க வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment